ஞாயிறு, 21 அக்டோபர், 2012

யாழ்ப்பாணத்தின் விட்டுப்போகும் உறவுகளாகும் மட்பாண்டங்கள்

அழிவடைந்து செல்லும் மட்பாண்டக் கைத்தொழில் ஓர் மீள்பார்வை


கலாசார பண்பாட்டு விழுமியங்களில் மாத்திரமின்றிக் கைத்தொழிலிலும் பாரம்பரியம் மிக்க பூமியாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் இன்று பல பாரம்பரியக் கைத்தொழில்கள் அருகிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அருகிவரும் இக்கைத்தொழில்களில் கலைநயம் மிக்கதொரு கைத்தொழிலாக விளங்கும் மட்பாண்டக் கைத்தொழில் மிக முக்கியமானதாகும். இன்று மாறிவரும் உலகின் போக்கிற்கேற்பத் தமது வாழ்வியலையும் மாற்ற முற்பட்ட யாழ்.குடாநாட்டு மக்கள் தமது பாரம்பரிய உறவுகளாகிய மட்பாண்டங்களைப் புறமொதுக்கிப் புதிய உறவுகளாக வலம் வரும் சில்வர் வெள்ளி அலுமினியப் பாத்திரங்களையே வரவேற்கத் தொடங்கியதன் விளைவாக இன்று யாழ்பாணத்தின் விட்டுப்போன உறவுகளாக மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
 
'மண்ணையும் பொன்னாக்கு' என்ற எம்முன்னோர்களின் கூற்றுக்கு இணங்க மண் எனும் மூலப்பொருளை மட்பாண்டம் எனும் கலைநயம் மிக்க முடிவுப்பொருளாக்கி எமக்களிக்கும் மட்பாண்டத்தொழிலாளியாகிய குருசாமி பிள்ளையார்செல்வத்தை உடுவிலில் அமைந்திருக்கும் அவரது தொழிற்தளத்தில் சந்தித்து அழிவடைந்து செல்லும் மட்பாண்ட உற்பத்திபற்றி எமக்கிருந்த ஆதங்கத்தினை வினாக்களாக்கித் தொடுத்தபோது இது குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்.
 
'மட்பாண்டங்களுக்குத் தேவையான மண்ணைப்பெற்றுக் கொள்வதிலேயே நாம்பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தொழிலுக்குத்தேவையான மண்ணை நெடுங்கேணி ,ஒட்டுசுட்டான், மல்லாவி ,கண்டாவளை போன்ற பிரதேசங்களிலிருந்து தான் கொண்டு வரவேண்டியுள்ளது. அங்கிருந்து மண்ணை இங்கு கொண்டு வருவதற்குரிய அனுமதி பெறுவது எங்களுக்குப் பெரும் சிரமமாக உள்ளது' என்றார்.  இன்று யாழ்.குடாநாட்டில் மட்பாண்டங்களின் விற்பனை மந்தகதியில் செல்வதற்கான காரணங்களை வினவினேன். அதற்குப் பதிலளித்தவர் 'இப்ப கொண்டுசெல்வதற்கும் கழுவிப்பாவிப்பதற்கும் சுலபமாக இருக்கிறதால அலுமினியப் பாத்திரங்களைத் தான் மக்கள் அதிகமாக விரும்பினம் அதோட காஸ்(Gass) அடுப்புத்தான் பாவனைக்கு உகந்தது என்று நினைக்கினம். முன்னர் எல்லாம் பண்டிகைக் காலங்களில் மண்பானை சட்டிகள் பெருமளவில் விற்பனையாகும். ஆனால் இப்ப தைப்பொங்கல் பண்டிகைக்கு கூட மக்கள் மண்பானைகளை விடுத்து அலுமினியம் ,சில்வர் பானைகளையே வாங்கிறதால பண்டிகைக்கால விற்பனைகளும் குறைஞ்சு போச்சு ஏதோ கோயில் திருவிழாக்காலங்களில் கற்பூரச் சட்டிக்காக எமது மண்சட்டிகளை வாங்கிறதாலயும் ஆடி அமாவாசை ,கார்த்திகை விளக்கீடு போன்ற விரத அனுட்டானங்களை இன்னமும் கடைப்பிடிக்கிறதாலயும் தான் எங்கட தொழில் ஓரளவுக்கேனும் ஓடிட்டு இருக்கு. சீவல் தொழிலாளிகளும் இப்ப முட்டிகளை வாங்கிறதில்லை பிளாஸ்ரிக் போத்தல்களைப்  பயன்படுத்தினம்' எனக்கூறினார்.
 


தென்னிலங்கையிலிருந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் அழகிய வர்ணப்பூச்சுக்களுடன் கூடிய கூசாக்கள் ,மண் உண்டியல்கள் போல் இங்கு எம்மாலும் இவற்றைச் செய்யமுடியும் ஆயினும் அதற்குப் போதிய பண வசதி எம்மிடமில்லை எனக் கூறுகிறார் கல்வியங்காட்டில் மட்பாண்டத் தொழிலைச்செய்துவரும் பழனிமுருகையா இராஜேந்திரன். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இம்மட்பாண்டத் தொழிலைச் செவ்வனே செய்துவரும் இவர் தமக்கிருக்கும் பிரச்சினை பற்றி மேலும் இவ்வாறு தெரிவித்தார்.

'சிறுகைத்தொழில் கண்காட்சிகளுக்காக எங்களைத்தேடி இங்க வாற அதிகாரிகள் எங்களுக்கு உதவி பெற்றுத்தருவதாக கூறுவார்கள். ஆனால் தங்கடதேவை நிறைவேறியதும் எங்களை எவருமே திரும்பிக்கூட பாக்கிறதில்லை. திரும்பவும் ஒரு மூன்று வருசத்துக்குப் பிறகு ஒரு கண்காட்சி வந்தால் தான் திரும்ப எங்களிட்ட வருவினம். எங்களுக்கு  கடன் உதவி பெற்றுத்தரக்கூட யாரும் முன்வருவதில்லை. நாங்களா வங்கியில கடனுதவி பெறுவோம் என்று போய்க் கேட்டாலும் அரச உத்தியோகத்தில இருக்கிற இரண்டுபேர் கையெழுத்துப்போட வேண்டும் என்பார்கள். எங்களுக்காக கையெழுத்து உதவி பெற்றுத்தர யாருமில்லை. இதனால் தான் நாங்கள் இனியும் இந்தத் தொழிலையே நம்பிக் கொண்டிருக்காமல் எங்களுடைய பிள்ளைகளையாவது நல்லாப் படிக்கவைக்கிறம். எங்களுக்குப் பிறகு எங்கட பிள்ளையள் இந்தத் தொழிலைச் செய்யமாட்டினம் தம்பி. எங்கட தலைமுறையோட இந்தத் தொழில் முடிஞ்சு போயிரும் என ஏக்கத்துடன் கூறியவரின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் படர்ந்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

மண்பானை,  சட்டிகளில் சமைத்து உண்ணும் உணவின் சுவையோ தனி என்று கூறுவார்கள். மண்பானை சட்டிகளில் சமைக்கும் உணவுப் பண்டங்கள் எளிதில் பழுதடைவதுமில்லை. அதேவேளை வெயில் காலங்களில் மண்பானையில் இட்டு வைக்கும் நீரின் இயற்கையான குளிர்ச்சி வேறெதிலும் கிடைப்பதில்லை. இவ்வாறு இயற்கை தரும் குளிர்ச்சி உடலுக்கு தீங்கில்லாதது. டல் ஆரோக்கியத்தைப் பேணுவதாகும். ஆயினும் இத்தகு சிறப்பு வாய்ந்த மட்பாண்டங்களின் மகத்துவத்தை உணர மறுக்கும் யாழ். குடாநாட்டு மக்களின் இன்றைய தெரிவோ 'ஒட்டவே ஒட்டாது' என்ற (Non stick) நொன்ஸ்ரிக் பாத்திரங்களாகும். அதிகம் வழுக்கும் பூச்சு என்று கின்னஸ் சாதனை படைத்த ரெஃலான் (Teflon) பசை தடவிய இந்தத் பாத்திரங்கள் பிசிறுகள் இன்றி இலகுவாகக் கழுவிச் சுத்தம் செய்யக் கூடியவை. கொழுப்புக்குத் தடா போட்ட கொலஸ்திரோல் மனிதர்களுக்காக எண்ணெய் இல்லாமலே இதில் பொரிக்கலாம். இவை போன்ற வசீகரங்களினால் தூண்டப்பட்ட மக்கள் இவ்வகையான பாத்திரங்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுமையல் அறைகளில் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கும் ரெஃலான் பாத்திரங்களே அதிகம் ஆபத்தானவை. ரெஃலானின் வேதியற் பெயர்: பொலிரெற்றாஃபுளோரோ எதிலீன் (Poly tetra flooro ethylene-PTFE)  ரெஃலான் பூசப்பட்ட பாத்திரங்கள் சூடேறத் தொடங்கியதும் ரெஃலானிலிருந்து முதலில்  நுண்ணியதும் அதிநுண்ணியதுமான துகள்கள் மேற்கிளம்புகின்றன. அவை பத்து நிமிடங்களில் நுரையீரலைத் தாக்குகின்றன.
ஆயினும் புதுமை விரும்பிகளான மக்கள் தமது பாவனைச் சுலபத்துக்காகவும் கவர்ச்சிக்காகவும் ரெஃலான் பாத்திரங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ரெஃலான் பாத்திரங்களின் உண்மை நிலை அறியாத நுகர்வோர் தமக்குப் பின்னால் காலன் பின்தொடர்வதை உணராதவர்களாய் அதன் கவர்ச்சியில் மூழ்கிப் போய் எமது பாரம்பரிய உறவுகளான மட்பாண்டங்களைப் புறமொதுக்கி வருகின்றனர். 

இன்று தண்ணிக்குடங்கள்  எல்லாம் வெள்ளிக்குடங்களாக மாறிவிட்ட நவீன உலகில் இன்னமும் மாறாமல் மட்குடங்களாக இருப்பவை கொள்ளிக்குடங்கள் மட்டும்தான். ஆயினும் இன்று  வெளிநாடுகளில் வழக்கிலுள்ள மின்சார எரியூட்டல்  எதிர்காலத்தில் எமது நாட்டுக்குள்ளும் ஊடுருவி எமது மரணச்சடங்கு முறையையும் மாற்றமுறச் செய்து மரண பரியந்தத்திலாவது எம்முடன் வரும் என நினைத்த கொள்ளிக்குடங்களுக்கும் வேட்டு வைத்து விடுமோ என்கின்ற இயல்பான ஏக்கம் எம் அனைவரது நெஞ்சங்களையும் இறுக்கத்தான் செய்கிறது.
 
எவ்வாறாயினும் அழிவடைந்து செல்லும் மட்பாண்டக் கைத்தொழிலை அழிவுற விடாமல் மீட்சி பெறச் செய்ய வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். ஆகையால் இது சம்பந்தமான சிறுகைத்தொழில் அமைச்சுக்கள் இம் மட்பாண்டக் கைத்தொழிலாளர்களது நிலையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், கொடுப்பனவுகளை வழங்க முன்வருவதன் மூலம் இம்மட்பாண்டக் கைத்தொழிலை அழிவுறாது தடுத்து நிறுத்தி மீட்சிபெறச் செய்து எமது பாரம்பரியக் கைத்தொழிலை நீண்டு நிலைக்கச் செய்யவேண்டும் என்பதே எமது பெரு விருப்பமாகும்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக